இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழல், மக்கள் போராட்டம், பொருளாதாரச் சிக்கலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளும் கட்சியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், எழுதப்பட்ட கடிதத்தில் “ அனைத்துக் கட்சி அடங்கிய அரசாங்கத்தை அமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. வரும் 29ம் தேதி இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு பிரதமர் ராஜபக்சே பதவி விலகியபின் புதிய அரசு அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் ஆளும் மகிந்திரா ராஜகபக்ச தலைமையிலான அரசு பதவி விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய இடைக்கால அரசு அமைக்கும் ஏற்பாடும் தொடங்கியுள்ளது.ஆனால், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அறிக்கைக்கு முரணாக பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் கருத்து இருக்கிறது. பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறுகையில் “நான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினமா செய்ய மாட்டேன். புதிய அரசு அமைந்தாலும் என்னுடைய தலைமையில்தான் அரசு அமைய வேண்டும்”எனப் பிடிவாதமாகப் பேசியுள்ளார்.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகக் கூறி மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் தினசரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தாருக்கு கடும் நெருக்கடியும், அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசிலிருந்து ராஜபக்ச குடும்பத்தார் அனைவரும் ஒதுங்க வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கும், சமையல் கேஸ், மண்எண்ணெய் ஆகியவற்றுக்காக நீண்டவரிசையில் காத்திருக்கிறார்கள். தினசரி 13 மணிநேரம் மின்வெட்டால் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர்.இலங்கையில் மக்கள் போராட்டத்தை அமைதிப்படுத்தவும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் புதிதாக இடைக்கால அரசு அமைய வேண்டும். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் இடம் பெற வேண்டும் என்று பெரிய தொழிலதிபர்கள்,அரசியல் வல்லுநர்கள், தனியார்அமைப்புகள் கூறியுள்ளன.
கொழும்பு நகரில் உள்ள அதிபர் அலுவலகத்துக்கு முன்பு மக்கள் நடத்திவரும் போராட்டம் 19 நாளாக நீடித்துள்ளது.இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ரயில்வே ஊழியர்களும் 24 மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.