ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் இனி துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டிய கட்டாயமில்லை என அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா பெற்றவர்கள் துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற, ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர் பயிற்சி எடுக்காமல் தன் சொந்த நாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்தே விண்ணப்பிக்கலாம். துபாயில் வைக்கப்படும் சாலை தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டால் உடனே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
தமிழகத்தில் நடிகை திரிஷா, அமலாபால், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. தமிழகத்திலிருந்து கோல்டன் விசாவை பெற்ற முதல் பெண் மருத்துவர் நஸ்ரின் பேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.