• Fri. Mar 29th, 2024

அக்யூஸ்ட்டுக்கு பொன். ராதாகிருஷ்ணன் அடைக்கலம்..?

ரவுடி படப்பை குணாவின் மனைவியை நேரில் சென்று சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தை தடுக்கவும் சிறப்பு அதிகாரியாக பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளத்துரை சார்ஜ் எடுத்துக்கொண்ட சில நாட்களிலேயே செங்கல்பட்டு இரட்டைக்கொலையில் தொடர்புடைய இருவர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள சரித்திர ரவுடிகளையும், இதர குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களையும் பதற வைத்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர ரவுடியான படப்பை குணா ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நியமனத்திற்கு பின்னர் தலைமறைவாகியிருப்பதும், அவரது வட்டாரங்களில் நடக்கும் கைது சம்பவங்களும் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது , நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 8 கொலை வழக்குகள் அடக்கம். பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

இவரது மனைவி எல்லம்மாள். இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றிய கவுன்சிலர் பதவியை குலுக்கல் முறையில் பெற்றுள்ளார். அப்போது ரவுடி குணா சிறையில் இருந்துகொண்டே செல்போன் வாயிலாக மனைவியின் வெற்றிக்கு திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பை குணா தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் அவரது மனைவி எல்லம்மாள் என்பவரை இன்று அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் பாஜக மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்னன் ரவுடி குணாவின் குடும்பத்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கடந்த 6 ஆம் தேதி அன்று பொன். ராதாகிருஷ்ணன் தனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை மறுத்துவிட்டு தனி காரில் படப்பை குணாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். மேலும், எல்லம்மாளின் செல்போன் மூலம் தலைமறைவாக உள்ள ரவுடி குணாவிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாகவும் கூறப்படுகிறது. அந்த சந்திப்பிற்கு பிறகு கடந்த 8 ஆம் தேதி அன்று ரவுடி குணாவின் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து அவர் பேசியதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசியல் கட்சிகள் ரவுடிகளிடம் மறைமுகமான பழக்கத்தை வைத்திருப்பது நாடறிந்த விஷயம். ஆனால், கடந்த வருடங்களில் பாஜக நேரடியாகவே ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், சட்ட ரீதியாக அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதும் பேரதிர்ச்சியை கொடுக்கிறது. பெருங்களத்தூர் ரவுடி நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்டோர் முன்னாள் பாஜக தலைவர் எல். முருகனின் தலைமையில் அக்கட்சியில் இணைய வந்த செய்திகளெல்லாம் இதற்கு சாட்சிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *