மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் மகாசிவராத்திரி மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வரும் நிலையில், 50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் நாளை மகா சிவராத்திரி மற்றும் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருப்பூர், நாமக்கல், சேலம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை அதிகாலை 3 மணி அளவில் வியாபாரிகள் கொண்டு வந்தனர். வாகனங்கள் மற்றும் லோடு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைகளில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகா சிவராத்திரி மற்றும் தொடர்ச்சியாக வரும் முகூர்த்த நாட்களில் ஆடு கோழிகளை வாங்குபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து செம்மறி ஆடு வெள்ளாடு ஆந்திரா ஆடு வகைகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடு பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கும் நாட்டுக்கோழி 700 முதல் 1500 ரூபாய் வரைக்கும் விற்பனையானதால், ஆடு கோழி வளர்ப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் எப்போதும் குறைந்த அளவே ஆடுகளின் வரவுகள் இருக்கும் அடுத்தடுத்து விழா காலம் என்பதால் இந்த வாரம் அதிக அளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆகையால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக காணப்பட்டது 50 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரை விற்பனை நடைபெற்று இருக்கும் என்று தெரிவித்தனர்.




