ஸ்டாலின் கொங்கு ஸ்கெட்ச்!
ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம், அனைத்து ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல்-மறுபெயரிடுதல் தொடர்பாக அரசாணை அக்டோபர் 6 ஆம் தேதியிட்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கே.முருகானந்தம் ஐ.ஏ.எஸ், அரசாணை வெளியிட்டார்.
ஆனால், அடுத்த நாளான அக்டோபர் 7 ஆம் தேதி கோவை அவினாசி சாலை உயர் மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அப்படியென்றால் நாயுடு என்ற பெயர் சாதி பெயர் இல்லையா என்ற கேள்வி சமூக தளங்களில் எதிரொலிக்கிறது.
இந்நிலையில் அவினாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்ட அறிவிப்பை பல்வேறு கொங்கு நாயுடு சங்கத்தினரும், தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருக்கும் நாயுடு சங்கத்தினரும் பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டுதல் பற்றிய அறிவிப்பில், தந்தை பெரியாரின் கொள்கைத் தோழர் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஜி.டி.நாயுடு ஆர்.எஸ்,எஸ், அமைப்பின் இரண்டாவது தலைவரான கோல்வால்கருக்கும் சிறந்த நண்பர் என்றும், ஜெர்மனி அதிபராக இருந்த ஹிட்லரால் பாராட்டப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
1920 ஆம் ஆண்டுகளில் மாட்டுவண்டிகளே பெரும் போக்க்குவரத்து வாகனமாக தமிழ்நாட்டில் இருந்தன. அப்போது ஜி.டி.நாயுடு வெளிநாட்டில் இருந்து சில உபகரணங்களை வாங்கி ஒரு புதிய பேருந்தை தயார் செய்து அதை பழனி. To பொள்ளாச்சி தடத்தில் அவரே ஓட்டினார்.
இதுதான் தென்னிந்தியாவின் முதல் பஸ்.. பிறகு யுனைடட் மோட்டார் என்னும் பஸ் கம்பெனி ஆரம்பித்து ஒரு பேருந்திலிருந்து 280 பேருந்துகளாக உயர்த்தி இந்தியாவின் மிகப் பெரிய பஸ் கம்பெனியாக அதை உயர்த்திக் காட்டினார்.
திருப்பூரில் ஒரு பஞ்சாலையை நிறுவி பெரும் செல்வரந்தாராக மாறினார்.
ஐம்பது ஏக்கர் நிலம் வாங்கி அதில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி கட்டி அதை அரசுக்கு இலவசமாக கொடுத்தார்..
அதுதான் இன்றைக்கு கோவை ஆர்.டிஓ அலுவலகம் ரோட்டில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
(WOMENS POLYTECHNIC COLLEGE)
அதேபோல் தடாகம் சாலையில் 100 ஏக்கரில் ஒரு பொறியியல் கட்டி முடித்து ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போதைய கவர்னர் கல்லூரிக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்து அரசாணை வெளியிட்டார்..
ஆனால், ஜி.டி.நாயுடு என்ன செய்தார் தெரியுமா? என் பெயரை கல்லூரிக்கு வைத்தால் ஒரே நாளில் இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவேன் எனக்கூறி அரசு அறிவிப்பை வாபஸ் பெற வைத்தார்.
அப்படிப்பட்ட ஜி.டி.நாயுடுவின் பெயரைத்தான் மேம்பாலத்துக்கு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என சமூக தளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுஹ் சம்பத் இந்த அறிவிப்பு குறித்து பேசுகையில்,
“ஜி டி நாயுடு அவர்கள் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஆதரவாளர். இரண்டாவது தலைவர் பரமபூஜனீய ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வால்கர் குருஜி அவர்கள் ஜி. டி நாயுடுவின் நெருங்கிய நண்பர். ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்தவர் ஆர் எஸ் எஸ் வளர்ச்சிக்கு உதவியவர்
திராவிடர் கழக தலைவர் ஈவெரா அவர்களின் இரண்டாவது திருமணத்திற்கு அதாவது தனது 70 வயதில் 26 வயது மணியம்மையை திருமணம் செய்த பொழுது சாட்சி கையெழுத்து போட்டவர் ஜிடி நாயுடு அவர்கள்.
திராவிட மாடல் திமுக விஞ்ஞானிகளுக்கும் தேச பக்தர்களுக்கும் ஜாதி சாயம் பூசுவதற்கு முயற்சிக்கிறது. சாதியின் பெயர்களை தெருக்களில் இருந்து நீக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கிறது.
நந்தனம் முத்துராமலிங்க தேவர் சாலையில் தேவர் பெயர் இருக்க கூடாது . சீர் மரபினர் பெயரில் மாணவர் விடுதி இருக்க கூடாது என்று அறிவித்த ஸ்டாலின், இப்போது மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை சூட்டுகிறார். அதற்கு தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ண நாயுடு பாராட்டி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
விஞ்ஞானி ஜி டி நாயுடு. அவர்கள் பெயரை திமுகவின் ஜாதி அரசியல் சித்து வேலைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை திமுகவினரிடம் பேசுகையில், “கொங்கு பூமியில் கவுண்டர்களும் நாயுடுக்களும்தான் அனைத்து துறைகளையும் கையில் வைத்திருக்கிறார்கள். இதில் அதிமுகவுக்கு ஆதரவாக பெரும்பான்மை கவுண்டர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சமூகம் என்பதால் அதிமுகவுக்கே அவர்களின் ஆதரவு இருக்கிறது.
இந்நிலையில் நாயுடுக்களின் ஆதரவை திமுகவுக்கு உறுதி செய்யும் நோக்கில்தான் தேர்தல் நேரத்தில் இந்த பெயர் சூட்டல் நடைபெற்றிருக்கிறது” என்கிறார்கள்.
