சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்யச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித் துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளன.
அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால், ஒவ்வொரு வேளையும் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.