• Wed. Mar 26th, 2025

மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…

ByPrabhu Sekar

Mar 1, 2025

மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை ரத்து செய்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் நாகர்ஜுனா ரெட்டி (40). இவர் மீது இந்தூர் மாநகர காவல் துறை குற்றப்பிரிவில்,மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து இந்தூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார், நாகார்ஜுனா ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நாகார்ஜுனா ரெட்டி, வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயற்சி செய்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதை அடுத்து இந்தூர் மாநகர காவல்துறை ஆணையர், நாகார்ஜுனா ரெட்டியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல். ஓ. சி-யும் போடப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை, சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது இந்தூர் மாநகர போலீசால் தேடப்பட்டு வரும் தலைமுறைவு குற்றவாளியான நாகார்ஜுனா ரெட்டி, இந்த விமானத்தில் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த பொழுது, இவர் இந்தூர் மாநகர போலீசால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து நாகார்ஜுனா ரெட்டியின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்தனர். அதோடு இந்தூர் மாநகர காவல் ஆணையருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் நாகார்ஜுனா ரெட்டியை, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்து, காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாகார்ஜுனாவை கைது செய்து இந்தூருக்கு கொண்டு செல்வதற்காக, தனிப்படைபோலீசார், சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.