• Tue. Mar 19th, 2024

மோசடி, போலி பத்திரப்பதிவு ரத்து.. தமிழகத்தில் புதிய நடைமுறை..!

ByA.Tamilselvan

Sep 28, 2022

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.
ந்நிலையில், இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத் துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். திருத்தப்பட்ட இந்த பதிவு சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-B ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முழு விவரம்: 1- ஒருவர் தனது இடம் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நினைத்தால், அது தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட பதிவாளர்களிடம் புகார் அளிக்கலாம். 2- இந்தப் புகாரின்படி, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்துவார். 3- விசாரணையில், போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணப் பதிவை மாவட்ட பதிவாளர் ரத்து செய்வார். 4- இந்த ஆணையின் மீது பதிவுத் துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். 5- முறையாக பரிசீலிக்காமல் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், இந்த சட்டப்படி, பதிவு சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு.
பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *