தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,
நடுகல்: பொதுவாக நடுகல் மரபு தமிழகத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சங்க காலத்தில் இருந்தே நடுகல் எடுக்கும் மரபு இருந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக புள்ளிமான்கோம்பை நடுகல் மற்றும் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புகளில் இருந்தும் அறியலாம். இந்த நடுகற்கள் சங்ககாலம் முதலாக ஆநிரை கவர்தல் போரில் ஈடுபட்டவர்களுக்கும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் மோதலில் ஈடுபடுபவர்களுக்கும் அல்லது ஏதேனும் வீரதீரச் செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து தொடர்ந்து வந்துள்ளது என்றே கூற வேண்டும்.
தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் இரண்டு நபர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களில் வலது புறம் உள்ள வீரன் சற்றே உயரமாகவும் உடைவாளினை வலது கையால் பிடித்த படியும் இடது புறம் உள்ள வீரன் சற்றே உயரம் குறைவாகவும் வாலினை கீழே ஊன்றிய படியும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இருவரின் தலையிலும் மகுடம் இடம்பெற்றுள்ளது. காதுகள் நீண்டு பத்திர குண்டலங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையானது இடுப்பில் வைத்தபடி நின்ற கோளத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது போரில் வீரமரணம் அடைந்த காரணத்திற்காகவோ அல்லது போரில் தன் உயிரை காப்பாற்றிய வீரனுக்கு தன்னோடு தன்னை காப்பாற்றிய வீரனுக்கும் சேர்த்து அவரது வீரத்தை போற்றும் விதமாக எடுக்கப்பட்ட வீரக்கல்லாக இருக்கலாம் என்றும் இச்சிற்பம் தற்போது முக்கூட்டுமலைப்பகுதி மக்களால் ஊர்காவலன் சுவாமி என்று வணங்கி வருகின்றனர் என்றும் இந்த நடுகல்லின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம் என்று அவர்கள் கூறினார்கள்.