திண்டுக்கல் மாநகராட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் மகன் போட்டியிடும் 4-வது வார்டில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாக புகார் எழுந்தது.அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 4-வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மகன் ராஜ்மோகன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் நாகராஜன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினரும், திமுகவினர் பணம் கொடுப்பதாக அதிமுகவினரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரவு முழுவதும் போலீஸார் 4-வது வார்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பணம் கொடுத்ததாக யாரை யும் பிடிக்கவில்லை. ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ராஜா, நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, பாஜகவினர், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.