தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது.
அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்துவந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இன்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புகார் மனு கொடுத்தார். காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.