உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி – உடன் வந்த அதிமுக நிர்வாகி மீது நடத்திய தாக்குதலில் அதிமுக நிர்வாகி படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் இன்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு திருமங்கலம் நோக்கி சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை மங்கல்ரேவு பகுதியில் இடை மறித்த அமமுக நிர்வாகிகள் டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாகவும், ஆர்.பி.உதயக்குமாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பி ஆர்.பி.உதயக்குமாருடன் வந்த கார்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் தினேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வந்த அபினேஷ், விஷ்ணு என்ற இருவர் சிறு காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேரையூர் டிஎஸ்பி சித்ரா தேவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.