முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றிருந்தாலும் , அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆவேச பேசினார்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்..,
அதிமுகவை அசைத்து பார்க்க எவனும் இந்த மண்ணில் பிறக்கவில்லை, கருத்து வேறுபாடுகள் வரும் அது கால உலகத்தில் காணாமல் போய்விடும்.
அதிமுக என்ன இன்றைக்கு நேற்றா கருத்து வேறுபாடுகளை சந்திக்கிறது, பல காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகளை சந்தித்து, கையாண்டு, எழுந்து கொண்டு, கடந்து வந்துவிட்டோம்., இப்போது செய்ய வேண்டியது எல்லாம் எடப்பாடியார் அவர்களை முதல்வராக்க வேண்டும் என இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல்களில் எப்போதுமே அதிமுக பின்னடைவைத் தான் சந்தித்திருக்கிறது., எம்ஜிஆர்., காலத்திலும் அம்மா காலத்திலும் இது போன்ற பின்னடைவை நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து இருக்கிறோம்., ஆனால் சட்டமன்றம் என்று வந்துவிட்டால் அதிமுக வீரு கொண்டு எழுந்து வெற்றி வரலாறு படைக்கும், அதற்கு வரலாறும், புள்ளிவிவரங்களும் உள்ளன.
அதற்காக 234 தொகுதியிலும் மிக விரைவில் வரலாற்று வெற்றியை மீண்டும் பெற்று தர, தேர்தல் வியூகங்களில் முதல் வியூகமாக 234 தொகுதிக்கும் வருகை தர உள்ளார், அவரது வருகை ஒரு வரலாற்று வருகையாக இருக்க இப்போது இருந்தே தொண்டர்கள் ஆயத்தமாக வேண்டும்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து க்கு இணையாகவும், நாட்டில் 5 வது இடத்திலும் இருந்த
காவல்துறை, முதல்வர் கையில் வைத்துள்ள காவல்துறையில் இன்று திமுக அரசால் கடந்த 3 ஆண்டுகளில் 1500 காவலர்கள் தற்கொலை செய்துள்ளனர். காவல் காக்கும் காவல்துறையை காக்க முடியாத அரசு இந்த மண்ணிற்கு தேவையில்லை என மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 10 மாதத்தில் மட்டும் 254 காவலர்கள் இறந்துள்ளனர். பணிச்சுமை காரணமாக, அவர்களிடத்தில் போதிய அக்கரை செலுத்தாத காரணத்தால் நான்கு மண்டத்தில் உள்ள காவல்துறையில் பணியாற்றுபவர்களின் உயிருக்கே உத்திரவாதம் இல்லை.
இப்போது விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் முகாமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒரு புறம் ஆசிரியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் அவரது மகனுக்கு மகுடம் சூட்டும் விழா மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்று மூத்த அமைச்சர்கள் எல்லாம் எள்ளும் கடுகும் போட்டால் எப்படி வெடிக்குமே அந்த அளவுக்கு கொதித்து போய் உள்ளார்கள், இருள் அடித்து போய் உள்ளார்கள்., அவர்களும் உதயநிதி துணை முதல்வர் ஆனதை எதிர்பார்ககவில்லை.
தமிழ்நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார் என தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். அது போக ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். நாளைக்கே சட்டமன்ற தேர்தல் வந்தால் எடப்பாடியார் முதல்வராக வர வேண்டும் என எண்ணுகின்றனர்.
நாங்களும் பார்த்தோம் மாநாட்டை, உதயநிதி பின்னால் இளைஞர்கள் உள்ளனர் என்றீர்கள் ஆனால் அவர் பின்னால் ஒரு இளைஞரும் இல்லை எல்லா இளைஞர்களும் வேறு ஒரு மாநாட்டில் இருக்கிறார்கள் என்றும்., உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எந்த தியாகமும் இல்லாமல், எந்த உழைப்பும் இல்லாமல், எந்த பங்களிப்பும் இல்லாமல் திடீர் என வருவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமாக உள்ளது.
இன்று அசூரனாக இருக்கும் திமுகாவை அழிக்க வேண்டுமென்றால் அதிமுக என்ற சக்தி இருக்கிறது.
அவர்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், அதிமுக தொண்டர்கள் நினைத்துவிட்டால் எடப்பாடியார் தலைமையில் அந்த அசுரனை அழித்து தர்மம் தலைக்க இங்கு உறுதி ஏற்க வேண்டும்.
சூரசம்ஹார விழா திருச்செந்தூர் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று இருந்தாலும், அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை எடப்பாடியார், பழனியில் உள்ள பழனிச்சாமி நிச்சயமாக திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் என பேசினார்.