

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிதி உதவி. சிவகாசியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறி தலா ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கன்னிசேரியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அதிவீரன்பட்டி பகுதியை சார்ந்த
வீரலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடன் பிறந்த சகோதரி கஸ்தூரி உள்ளிட்ட இருவர் பலத்த தீக்காயமடைந்தனர்.

இந்த நிலையில் 3 பேரின் இல்லத்திற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தலா 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்தார். பிள்ளைகளை தொடர்ந்து நல்ல முறையில் பயில வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தொழிலாளர்களுக்கு விபத்தில்லாத பட்டாசுகள் தயாரிப்பது குறித்து அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என கூறினார்.சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணப் பாண்டியன், ஆணையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பு என்ற லட்சுமி நாராயணன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

