மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அப்போது காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் எந்தொரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கைது செய்து, 14 மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மெஹபூபா முப்தி நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் தான் மீண்டும் வீடுக்காவலில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அவர் செய்துள்ள டிவிட்டில் ‘புல்வாமாவின் திரால் நகரில் ஒரு குடும்பத்தை ராணுவ வீரர்கள் தாக்கி உள்ளனர். அதில் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். அவர்களை சந்திக்க செல்வதாக கூறியதால், மீண்டும் என்னை ராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது’ என கூறி உள்ளார். அத்துடன், வீட்டின் முன் ராணுவ வாகனம் நிற்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.