• Fri. Mar 29th, 2024

திமுக அமைச்சர்களை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்

ByA.Tamilselvan

Jan 3, 2023

தமிழக அரசு கூடுதலாக விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒரு இளைஞனை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியுள்ளது உண்மையில் பாராட்டுதலுக்குரியது. என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் 6-வது அனைத்திந்திய கபடிப் போட்டி நடைபெற்றது. இதற்கான துவக்க விழா நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, “மதுரையில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த கபடிப் போட்டியில் அகில இந்திய அளவில் சிறப்பாக விளையாடிய 18 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 252 வீரர்கள் – வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை வைத்து அணியை உருவாக்கி, இந்த அணி வரும் பிப்ரவரியில் ஈரானில் நடைபெற உள்ள உலக கபடிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. இதற்கு உதவிய தமிழக நிதி அமைச்சர் அவர்களை பாராட்ட வேண்டும்.
அரசியல் வேறு கொள்கை வேறு. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். தற்போது தமிழக அரசு கூடுதலாக விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒரு இளைஞனை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியுள்ளது உண்மையில் பாராட்டுதலுக்குரியது. இதில் அரசியல் கலக்கக்கூடாது” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *