• Wed. Jan 22nd, 2025

முதல் முறையாக உலக வங்கி தலைவராக ஒரு இந்தியர்..!!

ByA.Tamilselvan

May 5, 2023

அமெரிக்காவின் வாஷிங்டனில் செயல்பட்டு வரும் உலக வங்கியின் தலைவராக முதல்முறையாக இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். அதோடு வெளி முதலீடு, பன்னாட்டு வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது. உலக வங்கி தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 2019ம் ஆண்டு அதன் தலைவராக பதவியேற்ற டேவிட் மால்பாஸ் (66), பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடியும் முன்பே அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். வரும் ஜூன் 1ம் தேதியுன் டேவிட் மால்பாஸ் தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறார்.
இந்நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோனை நடத்தினார். அதில், சர்வதேச நிதி நிறுவனமான ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார். உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதி கடந்த மார்ச் 29 முடிவடைந்து விட்டது. இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அஜெய் பங்கா ஐந்து ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.