



பல்லடத்தில் சாலையோர தர்ப்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ தர்பூசணி பழங்களை வைத்திருந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரமாக தர்பூசணி கடைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தர்ப்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அவிநாசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், ஆகியோர் இன்று சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ள தர்பூசணி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மங்கலம் சாலையில் சாலை ஓரமாக அமைக்கப்பட்டுள்ள தர்பூசணி கடைகளில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் கிலோ தர்ப்பூசணி பழங்களை குப்பை வண்டிகளில் ஏற்றி அகற்றினர். மேலும் அழுகிய நிலையில் ஆயிரம் கிலோ பழங்களை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோடை காலம் முடியும் வரை இது போன்ற ஆய்வுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

