

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கன மழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.மழைநீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஏடி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சுக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென கனமழை பெய்தது.இதன் காரணமாக மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல குடியிருப்புகளை சுற்றிச் சூழ்ந்தது முழங்கால் அளவு மழை நீர் தேங்கியது.வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் உணவு சமைக்க முடியாமலும் உடைமைகள் அனைத்தும் நனைந்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர்.
மழை நீர் சூழ்ந்து நிற்பதற்கு அப்பகுதி தாழ்வாக இருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.இது குறித்து பலமுறை அப்பகுதியினர் சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தற்போது பெய்த மழையால் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து இருப்பது தங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் தற்போது என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவித்து வருவதாகவும் குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே போர்க்கால அடிப்படையில் குடியிருப்பை சுற்றிச் சூழ்ந்துள்ள மழை தண்ணீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி மேடாக்கி இனிமேலும் இதுபோன்று பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி நிர்வாகம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
