வேடசந்தூர் செல்லும் சாலையோரம் பள்ளி கோடை கால விடுமுறையை முன்னிட்டு சாலையோரம் சிறுவன் பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதருகிறார்.

வெயிலோடு விளையாடி…. வெயிலோடு உறவாடி… என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது. வெயிலையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கோடை கால விடுமுறையை ஆரோக்கியமான முறையில் மாணவர்கள் கழிக்கின்றனரா? என்ற கேள்வி பேசும் பொருளாக எழுந்துள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என வீட்டுக்குள்ளேயே தங்களது கோடை கால விடுமுறையை கழித்து விடுகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.

பெற்றோர்களும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர். இதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகள், அடுத்த கல்வியாண்டுக்கு தற்போதே தயார்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.
குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வடகாடு கிராமத்தில் 8 ம் வகுப்பு படித்து வரும் சிவசங்கர் (வயது 14) தனது பெற்றோர்கள் வேடசந்தூர் செல்லும் வழியில் தேவசின்னம்பட்டி பிரிவு அருகே பாய் தோட்டம் என்ற பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்து பிழைத்து வருகிறார்கள்.
பள்ளி சிறுவன் சிவசங்கரின் பெற்றோர்கள் பனை நொங்குகளை ஏரியோடு, பாகாநத்தம் மற்றும் கொல்லப்பட்டி பகுதிகளுக்கு சென்று வாங்கி வந்து அதை ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் மற்றும் இடையக்கோட்டை செல்லும் சாலையோரம் தோட்டத்திற்கு முன்பு கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி கோடை கால விடுமுறை என்பதால் சிவசங்கர் தனது பெற்றோர்களை தோட்டத்தில் விவசாய பணியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய அனுப்பிவிட்டு கடுமையான வெயிலுக்கு இதமான பனை நுங்குவை சிறுவன் சிவசங்கர் மின்னல் வேகத்தில் அரிவாளால் ஸ்டைலாக நுங்குவை வெட்டி எடுத்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஒரு நுங்கு ரூ 10 க்கு விற்பனை செய்து வருகிறார்.
சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் சிறுவன் பனை நுங்கை அரிவாளால் வெட்டி எடுக்கும் காட்சியை பார்த்து வாகனங்களை நிறுத்திவிட்டு நுங்கு வாங்கி ருசித்து விட்டு செல்கின்றனர்.
இந்த சின்னஞ்சிறு வயதில் கோடை விடுமுறை என்றால் கையில் செல்போனை வைத்து கேம் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் மனஉறுதியோடு உத்வேகத்தோடும் எப்படியாவது தொழில் செய்து தனது பெற்றோர்களின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்று லட்சிய உறுதி கொண்ட பள்ளி சிறுவன் வாழ்வில் உழைத்து உயர நினைப்பதை சாலையில் செல்பவர்கள் பனை நுங்கு விலைக்கு வாங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.




