• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்-ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Sep 30, 2022

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கியக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று ஓரளவு எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார்.
முதல்-அமைச்சர் ‘ஓரளவு’ என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இது மட்டுமல்லாமல், மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள், மின்வாரியப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகளுக்காக சென்னை முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இதுவும் மழைநீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு காரணமாகும். இது தவிர, மழைக்காலங்களில் இந்தப் பள்ளங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் கீழே விழுந்துவிடுகின்ற நிலை ஏற்படுகிறபோது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் பேருந்து நிலையங்கள் குளமாக காட்சி அளிப்பது என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது, ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.