மதுரை மாவட்டத்தில் நேற்றைய தினம் தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் மதுரை செல்லூர் கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாய்களில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் வாய்க்கால்கள் நிரம்பி நீர் வெளியேறுவதால், மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான கூடல்புதூர், கூடல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக அத்தியாவாசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் அவதியடைந்துவருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பெண்கள், முதியோர்கள் நனைந்தபடி பணிக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்பு போஎன்ற விஷ ஜந்துகள் வெளியேறுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
அமைச்சர் பி.மூர்த்தியின் தொகுதியான இந்த பகுதியில் பல நாட்களாக நீடித்துவரும் பிரச்சனை குறித்து அவரிடம் புகார் அளிக்கப்பட்டும், செல்லூர் கண்மாய் முறையாக தூர்வாரப்படாத நிலையில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.