
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்ட விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் விபத்தில் இருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த 168 பயணிகள் உட்பட 176 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 9.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 168 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 176 பேருடன், புறப்பட்டு ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதை அடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையிலே நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இழுவை வண்டிகள் மூலம், விமானம் ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அது புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு, கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த 168 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த 168 பயணிகள் உட்பட 176 பேர், நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
