• Sat. Apr 20th, 2024

விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்

ByKalamegam Viswanathan

Feb 27, 2023

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரதசாத், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஒத்தக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும்போது விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இரு, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவோர் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த உயிரிழப்புகளையும், விபத்துகளையும் தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டி வருகிறார்கள். ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாட்டுக் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். இதில், சார்பு ஆய்வாளர் கணேசன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலு, காவலர்கள் கவியரசு, விஜயக்குமார் மற்றும் கற்பகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்தக்கடை பகுதியில் ‘கோ – சாலை’ அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *