கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை, மண்டைக்காடு, முட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்கை நடத்துகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக மர துடுப்புகளால் இயங்கும் நாட்டு படகு மூலம் ஒரு சில கிலோ மீட்டர் கடலுக்குள் சென்று பாரம்பரிய கரை மடி வலைகளை விரித்து பின்னர் கரையில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இணைந்து வலையை இழுத்து குவியல் குவியலாக மீன்களை பிடித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 80-களில் இருந்து மீன்பிடி தொழிலில் நவீன படகுகள் வருகையால் பாரம்பரிய கரை மடி வலை தொழில் மெல்ல மெல்ல அழிய தொடங்கியது. இந்நிலையில் 90-களில் முற்றுலும் நவீன படகுகள் வருகையால், இந்த கரை மடி வலை தொழில் மீனவர்களால் அறவே கைவிடப்பட்டது. எனவே மீனவர்களும் பைபர் படகு, விசைப்படகு என மாற்று மீன்பிடி தொழிலை நாடி சென்றனர். குறைந்த பட்சம் பைபர் படகில் நாள் ஒன்றுக்கு 3-பேரும் விசைப்படகில் 15-பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். பாரம்பரிய கரை மடி மீன்பிடி தொழிலை அறவே கைவிட்டனர்.

இந்நிலையில் தற்போது கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கடல் சீற்றம் மற்றும் சூரை காற்றால் ஆழ்கடல் பகுதிகளுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில், மீனவர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே வாழ்வாதாரத்திற்காக எந்த வித இன்னல்களுக்கும் இடமில்லாமல் கரையில் இருந்தே மீன்பிடிக்கும் தங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலான கரை மடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர். கரைமடி வலையில் துடிக்க துடிக்க பிடிக்கும் மீன்களை கடற்கரையிலேயே ஏலம் விட்டு வருகின்றனர். இந்த கரைமடி மீன்கள் சுவை மிக்கதாக இருப்பதால் உடனுக்குடன் விற்பனையுமாகி விடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடல் சீற்றம், மற்றும் சூறைக்காற்று போன்ற இயற்கை சீற்றத்தின் போதும் வாழ்வாதாரத்திற்கு இந்த கரை மடி வலை கைகொடுத்து நூற்று கணக்கான குடும்பத்தை வாழ வைப்பதாகவும், உடனடியாக பிடித்து விற்பனை செய்யும் இந்த மீன்கள் சுவை மிக்கதாக இருப்பதால் வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி அதிக விலைக்கும் வாங்கி செல்வதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த பாரம்பரிய கரை மடி வலை மீன்பிடிப்பிற்கு இளைஞர்கள் முன் வருவதில்லை என்றும், இதுபோன்ற காலங்களிலும் 50-வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களே முன்வந்து இந்த தொழிலை செய்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.