
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்செயலாக கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட மதுரை ஆயுதப்படை காவலர் மோகன்குமார் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மூளைச் சாவடைந்தார். இந்நிலையில் அவரது உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்வதற்கு மோகன்குமார் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில் அவரிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரல், 42 வயதான ஆண் நோயாளிக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நாளான இன்று (07.02.205) சிறப்பு சிகிச்சை பிரிவில் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர், மூளைச் சாவடைந்த காவலர் மோகன்குமாரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகமும் அன்றைய தினமே 22 வயதான நோயாளிக்கு அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன்முறையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நேற்று (06.02.2025) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் உடல் உறுப்பு தானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடனும் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்., தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ், ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது என்றார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்களில் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.கார்த்திகேயன்,ஏ.சாஸ்தா, ஆர்.வில்லாளன், எஸ். பாலமுரளி, எம்.கண்ணன், ரமணி, மயக்கவியல் மருத்துவர்கள்ஸகல்யாண சுந்தரம், வைரவராஜன், சண்முக சுந்தரம், செந்தில் குமார், பாலமுருகன், மரு.ரமேஷ், பிரமோத், முரளி, செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி, CMCHIS ஊழியர் சித்ரா, இரத்த வங்கி மருத்துவர் சிந்தா ஆகியோரை மருத்துவமனை முதல்வர் வெகுவாக பாராட்டினார்.
