• Fri. Apr 19th, 2024

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்

ByA.Tamilselvan

Mar 29, 2023

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த புலியகுளம் மசால் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகன் அயோத்தி ரவி எனும் ரவி. இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் உரிய அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோவை போத்தனூர் சரக உதவி ஆணையர் சதீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மசால் லே-அவுட் பகுதியில் உள்ள ரவியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது ரவி வீட்டில் இருந்த நிலையில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் அவரது வீட்டின் பீரோவில் இரண்டு கை துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 5 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ரவியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ரவி பல்வேறு பிரச்னைகளுக்காக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும் அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.மேலும் இரண்டு கை துப்பாக்கிகளும் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும் எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் அம்பலமானது.போத்தனூர் காவல் நிலையத்தில் வைத்து ரவியிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்னையில் யாரிடமிருந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டது?. வேறு ஏதேனும் கும்பலுடன் ரவிக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து முன்னணி பிரமுகரின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *