சிந்தனைத்துளிகள்
பயம் என்றால் என்னம்மா?
இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள். கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள். தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா? பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அந்தச் சிறுவன்.