• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை.

ByR. Vijay

Mar 22, 2025

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பருவம் தவறி கோடையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இவை பெரும் மகசூல் இழப்பை சந்தித்துள்ளது. பூக்கும் தருணத்தில் பெய்த மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் பூக்கள் பூக்காமலும் செடியில் பூத்திருந்த பூக்கள் கொட்டியும் காய்கள் காய்க்காத சூழல் உள்ளது.

குறிப்பாக  திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதமங்கலம், மாவிலங்கை, கீழகண்ணாப்பூர், ராமச்சந்திரபுரம், கீரங்குடி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில்  மஞ்சள் தேமல் நோய் உருவாகி உள்ளது. பச்சை பசேல் என்று காட்சி அளித்த வயல்வெளிகள் அனைத்தும் தற்பொழுது மஞ்சள் மஞ்சளேன்று என்று காட்சியளிப்பதோடு பயிர்களின் வளர்ச்சியும் வெகுவாக பாதித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ 7000 முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள சூழலில், தற்பொழுது மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் செய்வது அறியாத திகைத்து வருகின்றனர்.

ஏற்கனவே சம்பா சாகுபடியும் எதிர்பார்த்த அளவிற்க்கு கை கொடுக்காத சூழலில், தற்பொழுது உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியும் பாதித்திருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உரிய வழிகாட்டுதல் இல்லாமல், தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கித் தெளித்தும் அதுவும் பயன் அளிக்காத நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ‌ ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவில்லை என  குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள் ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொள்வதோடு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.