
விபத்தில் வலது காலை இழந்த கதிரவனுக்கு (பிரபுதேவா) எட்டுவயது நிரம்பியதன் மகள்தான் உலகம். அவளுக்கு பிறப்பிலேயே இதய வால்வு பிரச்சினை இருப்பது தெரியவர, நிலைகுலைந்து போகிறார். அறுவை சிகிச்சை மூலம் மகளின் உயிரைக் காப்பாற்ற எழுபது லட்சம் ரூபாய்
தேவைப்படுகிறது. அவ்வளவு பெரிய தொகையை தயார் செய்ய முடியாமல் தவிக்கும் அவர், தொழிலதிபரான ருத்ராவின் (வரலட்சுமி சரத்குமார்) மகளை கடத்தி, அந்த தொகையைபெறத் திட்டமிடுகிறார். திட்டத்தை செயல்படுத்தும் நாளில் கையும் மெய்யுமாக பிடிபடுகிறார். கதிரவனுக்கு முன்பே ருத்ராவின் மகள் கடத்தப்பட்டிருக்க, இப்போது தன் மகளையும் காப்பாற்ற முடியாமல், ருத்ராவின் மகளை கடத்தியது யாரென்றும் தெரியாமல் அலைபாயும் நாயகனின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி அமைந்தன என்பது தான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் கதை.ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற இன்னொரு குழந்தையை கடத்தவேண்டும் என்கிற மூர்க்கமான எதிர்மறை சிந்தனையை நியாயப்படுத்த வேண்டிய சவால் இயக்குநருக்கு. திரைக்கதை, காட்சி அமைப்புகளில் தேவையான அளவுக்கு ‘டீடைல்’ செய்து அந்த சவாலை எளிதாக கடந்துவிடுகிறார் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். நாயகனும், வில்லனும் ஆடும் ‘உள்ளாட்டம்’ ரசிக்கும்படி இருந்தாலும், சந்தேகம் வராதபடி வில்லன் நடிகருக்கான தேர்வை செய்திருக்கலாம். வில்லனாக நடிக்கும் ஜான் கொக்கெனின் நடிப்பு, படு செயற்கையாக இருப்பது அவரை எளிதில் பார்வையாளன் வில்லன் என தீர்மானிக்க வைத்து சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறதுபாசமான அப்பா, அதிரடி நாயகன் என இரண்டு பரிமாணங்களுடன் எழுதப்பட்ட, ஒற்றைக் கால் கொண்ட நாயகன் கதாபாத்திரத்துக்குள் தன்னை நன்றாகவே தகவமைத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஒற்றைக் காலில் ஆடும் நடனம் ஈர்த்தாலும், சண்டை காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. ருத்ரா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் கச்சிதம். ஆனால், இத்தனை படங்களுக்கு பிறகும் தமிழ் உச்சரிப்பில் தன்னை அவர் இன்னும் முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை. வழக்கமான நண்பனாக வரும் நண்டு ஜெகன் கதாபாத்திரத்தின் ‘ட்விஸ்ட்’ எதிர்பாராதது.
சின்னச் சின்ன பாடல்கள் மூலம் முக்கிய திருப்பங்களுக்கு உணர்ச்சியைக் கூட்டும் இமானின் முயற்சிக்கு, கார்க்கியின் பாடல் வரிகள் பக்க பலம். தமிழ் சினிமா இழந்துகொண்டு வரும் பாடல்களை பயன்படுத்துவதற்கான மாற்று உத்திபோல இப்பாடல்கள் எடுபடுகின்றன. பிரபுதேவாவின் அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜை திரைக்கதையில் ஊறுகாயாக பயன்படுத்தியது உட்பட படத்தில் பல குறைகள் இருந்தாலும், படத்தின் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தர்க்க ரீதியாக நியாயம் செய்த வகையில்
‘பொய்க்கால் குதிரை’யின் ஆட்டத்தை ரசிக்கலாம்.
