போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த அதிமுக ஆட்சியின்போது போலியான ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு நடைபெற்றதாக தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதன்படி ஏற்கனவே விற்பனை செய்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மீண்டும் விற்பனை செய்திருப்பது, ஆள் மாறாட்டம் மூலம் போலி போட்டோக்களை ஒட்டுவது போன்ற மோசடிகளும் நடந்துள்ளது. இந்த போலி பத்திரப்பதிவுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், போலி பத்திரப்பதிவுக்கு முயற்சிப்போரை போலீசில் ஒப்படைக்கவும் சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் உதவியுடன் ஏதேனும் பத்திரப்பதிவுகள் நடந்திருப்பதாக கருதுவோர், ஆதாரங்களுடன் விருதுநகர் மாவட்ட பதிவாளர் அல்லது சார்பதிவாளரிடம் புகார் மனு அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற மோசடி பத்திரப்பதிவுகள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.