• Thu. Apr 25th, 2024

எஸ்.ஏ.சிக்காக கண் கலங்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். தனது வாழ்க்கை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்து, கலங்கிப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் 1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இவர், இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் விஜய்காந்தே நடித்திருப்பார்.

தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில், தான் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் கடந்து வந்தபாதையை பற்றியும் பதிவு செய்துள்ளார். ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ யின் முதல் எபிசோட் சமீபத்தில் வெளியானது.

பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் தான், என் வாழ்க்கை தொடங்கியது. இதனால், இங்கிருந்தே என் வாழ்க்கை பயணத்தை உங்களுக்கு சொல்கிறேன் என்றார். சினிமாவில் பெரிய எழுத்தாளராக வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்துக் கொண்டு சென்னை வந்த போது அடைக்கலம் கொடுத்தது இந்த இடம் தான்.

சினிமா என்பது ஒருவித்தியாசமான மாய உலகம் இதில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றியை அடைந்துவிடலாம். ஆனால், அந்த வெற்றியில் நம் கனவை மறந்துவிடுவோம். நாம் கடந்து வந்த பாதையை எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். இதே நாயுடு ஹால் முன்பு 47 நாட்கள் வீதிகளிலேயே படுத்து இருந்தேன் என கூறியிருந்தார். இந்த வீடியோ அனைவர் மனதையும் பாதித்து மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கண்ணுல தண்ணீர் வருது சார்… ஒரு உச்ச நட்சத்திரத்தை உருவாக்கிய அப்பாவா இப்படி நெகிழ வைக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்குரியது. இளைஞரே, என்றும் உங்கள் முயற்சிகள் எங்களுக்கு முன் படிக்கட்டுகள். என உணர்ச்சி மிகுதியில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *