• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா..,

Byமுகமதி

Jan 13, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.

கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய், சிந்தியா, ஜென்ம ராகினி சகாய கில்டா, சத்துணவு அமைப்பாளர் புஷ்பலதா சமையல் உதவியாளர்கள் ஜோதி முத்து, போதுமணி ஆகியோர் பொங்கல் வைத்தனர். மாணவ மாணவிகள் வண்ண வண்ண கோலங்களை வரைந்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பொங்கல் விழா குறித்து பேசும் பொழுது,

பொங்கல், அறுவடை காலத்தின் முடிவில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும். இது விவசாயிகளின் உழைப்பிற்கும், இயற்கையின் கொடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடி மகிழ்கிறோம். தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.
பொங்கல் பண்டிகை என்பது நான்கு நாட்கள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது, புதிய அரிசியால் பொங்கல் வைத்து, கரும்புடன் கொண்டாடுவது இதன் முக்கிய அம்சம், தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டுகிறது என்று பேசினார். மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார். இதேபோன்று கந்தர்வ கோட்டை ஒன்றிய முழுவதும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ‌ முன்னதாக பெருச்சி வன்னியம்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தலைமையாசிரியர் சின்ன ராஜா தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது. ஆசிரியை ரமா பிரபா, சத்துணவு பணியாளர்கள் காலை உணவு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.