அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜன.25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். இந்த போராட்டத்தில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமையாகும். தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் ஜன.25-ம் தேதி கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட மாணவரணி செயலாளர்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.