
டாஸ்மாக் வழக்கில் விதிகளை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சென்னை மற்றும் பிற பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டது. டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையின் முடிவில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, சட்டவிரோத பணபுழக்கம் தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறைக்கு நடவடிக்கையைத் தொடர அனுமதியும் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 16ம் தேதி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்டோரது வீடுகளில் சோதனை நடந்தது. விசாகனை அழைத்து 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் துணைப் பொதுமேலாளர் ஜோதி சங்கரிடமும் விசாரணை நடந்தது.
இந்த சூழலில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடைபெறுவதாகவும், அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது.
நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை. தனிநபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி அமர்வு கூறின. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
