• Fri. Mar 29th, 2024

15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன்‌ பேட்டி

கோவை மாவட்டம், சூலூர்‌ வட்டம்‌, கிட்டாம்பாளையம்‌ கிராமத்தில்‌ அமைந்துள்ள அறிஞர்‌ அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில்‌ ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ அடிக்கல்‌ நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்‌.சமீரன்‌, மாவட்ட தொழில்‌மைய பொது மேலாளர்‌ ஜி.திருமுருகன்‌, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கூட்டுறவு தொழிற்பேட்டையின்‌ நிர்வாக அலுவலர்‌/தொழில் கூட்டுறவு அலுவலர் கு.சுகந்தி, அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மேலாளர் ஆர்.சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.ராமகிருஷ்ணன், டி.கே.பழனிசாமி மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், கிட்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பணிகளை துவக்கி வைத்து அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ பேசுகையில், அறிஞர்‌ அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை‌ கிட்டாம்பாளையம்‌ கிராமத்தில்‌ 280.64 ஏக்கர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌, அவினாசி வட்டம்‌, தெக்கலூர்‌ கிராமத்தில்‌ 35.40 ஏக்கர்‌ ஆக மொத்தமாக 316.04 ஏக்கர்‌ பரப்பளவில்‌ ஒருங்கிணைந்த பகுதியாக கூட்டுறவு முறையில்‌ அமைந்துள்ள ஒரு மிகப்‌ பெரிய கூட்டுறவு தொழிற்பேட்டையாகும்‌.
இத்தொழிற்பேட்டையில்‌, 90 சென்ட் மனைகள் 37ம்‌, 45 சென்ட் மனைகள் 241ம்‌, 30 சென்ட் மனைகள் 164ம்‌, 15 சென்ட் மனைகள் 143‌ மொத்தம்‌ 585 தொழில்‌ மனைகள்‌ பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன.
உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தொழிற்பேட்டையினை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நானும் மாவட்ட கலெக்டரும் ஆய்வு மேற்கொண்டோம்.
அதனைத்தொடர்ந்து, இத்தொழிற்பேட்டையில் ரூ.24.61கோடி மதிப்பீட்டில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள் அமைத்தல், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு அரசின் பங்கான ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளின் பங்கு ரூ.14.61கோடி ஆகும்.
இதன்மூலம் பொறியியல், விசைத்தறி, பின்னலாடை போன்ற பல உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்கள் அமைவதற்கான சூழ்நிலை தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தொழிற்பேட்டை முழு அளவில் செயல்பட தொடங்கும் பொழுது இந்நிறுவனங்கள் மூலம் சுமார் 15000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளும், சுமார் 30,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
பயனாளிகளின் பங்கினை விரைவாக வழங்கினால் பணிகள் விரைவில் நிறைபெறும். மேலும், அரசு வழங்கும் உதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி மிகச்சிறந்த தொழிற்பேட்டையாக இதனை உருவாக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *