நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திடீரென அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளை சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது, சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதால் சரக்கு ஊர்திகள் வாடகை கட்டணத்தை உயர்த்தக் கூடும். அதனால் மக்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எனவே மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.