• Sat. Feb 15th, 2025

ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு உத்தரவு

ByIyamadurai

Feb 4, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973-ம் ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ; 2003-2004-ம் ஆண்டு முதல் 2009-2010-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை உள்ளது.

அதை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க இயலவில்லை. நிலுவைத் தொகையை வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் எதுவும் அலுவலக ஆவணங்களில் இல்லை. மேலும், வசூலிக்கப்பட வேண்டியவர்களை அடையாளம் காணவும் முடியவில்லை. எனவே அந்த ரூ.48.95 கோடி தொகையை சிறப்பினமாக கருதி அதை முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.