

படிப்பறிவில்லாத கைதிகளை படித்தவர்களாக மாற்ற, ‘கல்வியால் மாற்றம்’ என்ற திட்டத்தை கர்நாடக அரசு வகுத்துள்ளது. இந்தத்திட்டம் பெலகாவி, ஷிவமொகா, தார்வாட், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உட்பட பல்வேறு சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில் தற்போது, மைசூரு மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தொடக்க கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கல்வியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறையில் 36 பெண் கைதிகள், 401 ஆண் கைதிகள் உள்ளனர்.
இவர்களுக்கு பாடம் நடத்த படித்த கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மற்ற கைதிகளுக்கு தினமும் இரண்டு மணி நேரம் பாடம் கற்றுத்தருகின்றனர். 24 அத்தியாயம் கொண்ட புத்தகத்தில் உள்ள பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எழுதுவது, படிப்பது, பொது அறிவு, கணக்கு கற்று கொடுக்கப்படுகிறது.இதுகுறித்து மைசூரு மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளர் திவ்யஸ்ரீ கூறியதாவது: “தற்போது பாடம் கற்கும் கைதிகளுக்கு மார்ச் மாதம் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் எஸ்.எஸ்.எல்.சி.யில் சேரலாம். அதன்பின்னர், கர்நாடக மாநில திறந்த வெளி பல்கலைக்கழகம், இக்னோ கிளை மூலம் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கலாம்.
கைதிகளுக்கு கல்வியளிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும். கல்வி மூலம் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள் சிறையில் இருந்து விடுதலையான பின்பு, தவறு செய்யாமல் நல்ல வாழ்க்கை நடத்த கல்வி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
