



நேபாளம், பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதே போல பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விபரம் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

