• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கழுகும், நரியும்

வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.


இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது, அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.


இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரியவருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக அப்படிச் செய்தாய்’ என கழுகைப் பார்த்துக் கேட்டது.


“அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்” எனப் பதில் கூறியது கழுகு.

கதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.