• Fri. Apr 26th, 2024

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்…

Byவிஷா

Oct 28, 2021

ஒரு ஊரில் அரசர் ஒருவர் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.


வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது…


உடனே, பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை. கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.


அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது…
பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்த அரசன் உடனே தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.


தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *