கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் 2 கல்லூரிகள், 17 தனியார் பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கும்பகோனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளக்குறிச்சி பள்ளி நிகழ்வுகள் தொடர்பாக முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்களது கருத்துக்களை எடுத்துரைத்ததாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு படிப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கல்வி அதிகாரி தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் நலனுக்காக இந்த பள்ளியை உடனடியாக சரி செய்து மீண்டும் வகுப்புகள் தொடங்க முடியுமா என ஆராயப்பட்டது. இல்லையென்றால் இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், இரண்டு கல்லூரிகள் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தார். அங்கு 40, 40 வகுப்பறையோடு தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தயாராக உள்ளோம், அரசு என்ன சொல்கிறது என்பதற்காக காத்துக் கொண்டுள்ளதாக கூறினார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சரின் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.