திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா சின்னழகுநாயக்கனூர் ஊராட்சி மணல்காட்டூர், வைரபெருமாள்பிள்ளையூர், கொண்டமநாயக்கனூர் ஆகிய மூன்று ஊர்களில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்த ஊர்களுக்கு சின்னழகுநாயக்கனூர் வரட்டாற்றில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட ஸநீர்த்தேக்க தொட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து மின் மோட்டார் மூலம் குழாய் வழியாக மணல்காட்டூர், வைரபெருமாள்பிள்ளையூர், கொண்டமநாயக்கனூர் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சின்ழகுநாயக்கனூர் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் கடந்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுது ஏற்பட்ட நிலையில் அதை பழுது நீக்க ஊராட்சியின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலூர் மற்றும் கருத்தக்காபட்டி ஆகிய ஊர்களுக்கு பெரும் சிரமத்தோடு நடந்து சென்று காவிரி குழாயில் இருந்து குடிநீர் பிடித்து வந்தனர்.
மின் மோட்டாரை பழுது நீக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 3 ஊர் பொதுமக்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் வி.தர்மர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலி குடங்களுடன் கோவிலுரில் திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எரியோடு போலீஸார் மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீர கடம்ப கோபு, ஊராட்சி செயலர் பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பழுது நீக்கப்பட்ட மின் மோட்டாரை பொருத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இதனால் பஸ் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
—-




