• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

நகை கடை உரிமையாளர்களுக்கு காவல் துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByPrabhu Sekar

Nov 24, 2026

தாம்பரம் அடுத்த சேலையூரில் தங்க நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சேலையூர் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலையூர், சிட்லபாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தங்க நகை கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் நெல்சன் பேசுகையில்,

“சமீப காலமாக தங்க நகை கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் இயங்க வேண்டும். அதன் பதிவுகளை குறைந்தது 90 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கடைகளின் கதவுகள், ஷட்டர்கள் வலுவானதாக இருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பான லாக்கரில் வைக்க வேண்டும். அலாரம் மற்றும் சைரன் கருவிகளை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

கடைக்கு வரும் சந்தேகமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகையின் தரத்தை நிபுணர் மட்டுமே சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர் இருக்க வேண்டும். ஒரு பணியாளரை மட்டும் வைத்து கடையை இயக்கக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சேலையூர் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா சிட்லபாக்கம் ஆய்வாளர் சிவகுமார், மேடவாக்கம் குற்றப்பிரிவு அந்தோணி சுவக்கீன் ஜெரி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.