• Tue. Feb 18th, 2025

67 பேர் உயிரிழப்பிற்கு ஒபாமா, பைடன் தான் காரணம் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

ByP.Kavitha Kumar

Jan 31, 2025

வாஷிங்டன்னில் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் மோதி ஏற்பட்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்ததற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பராக் ஒபாமா தான் காரணம் என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கத் தயாராகும் போது, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. அப்போது விமானமும், ஹெலிகாப்டரும் ஆற்றில் விழுந்தன. இந்த பயங்கரமான விபத்தில் விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா தான் காரணம் என அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப்
குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒபாமாவும், பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர். அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016-ல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

ஆனால் 2020-ம் ஆண்டு ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்றார்.