• Sat. Apr 20th, 2024

என்ன வேணும்னாலும் செய்ங்க.. ஆனா கொங்கு மண்டலத்துல கொடி பறக்கணும்..

பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், தேர்தல் பணியை கண்காணிக்கவும், கட்சியை வெற்றி பெறச் செய்யவும், உட்கட்சி உள்குத்துக்களில் இருந்து வேட்பாளர்களை காப்பாற்றவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் இருந்து, பூத்துக்கு ஒருவர் என களமறிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பல கோஷ்டிகளாக பிரிந்து, ஒருவருக்கொருவர் ‘உள்குத்து’ வேலை செய்து கொண்டு இருப்பதாக, அக்கட்சியின் விசுவாசிகளே புலம்புகின்றனர்.கடந்த சட்டசபை தேர்தலில் கோட்டை விட்ட கொங்கு மண்டலத்தை, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்றியே ஆக வேண்டும், என, தி.மு.க., தலைமை கங்கணம் கட்டிக் கொண்டு தீவிரம் காட்டும் நிலையில், இந்த உட்கட்சி பஞ்சாயத்துகள், வெற்றி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என தலைமைக்கு ‘ரிப்போர்ட்’ சென்றுள்ளது.இதையடுத்து, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியிடம், ‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. எந்த பிரச்னையும் வெற்றியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டியே தீர வேண்டும்,’ என, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் கட்சியில் நிலவும் பஞ்சாயத்துகள், ஒற்றுமையின்மையை கண்டு பயந்து போன அமைச்சர், உள்ளூர் நிர்வாகிகளை இதற்கு மேல் நம்பினால், சட்டசபை தேர்தல் கதி தான் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டார்.இதையடுத்து, தனது சொந்த ஊரான கரூரில் இருந்து, பூத்துக்கு ஒருவர் என தேர்தல் கண்காணிப்பாளர்களை இப்பகுதிகளில் களமிறக்கியுள்ளாராம். இதனால், வார்டு வாரியாக எந்த பிரச்னை நடந்தாலும், அவ்வப்போது அமைச்சர் கவனத்துக்கு சென்று விடுகிறதாம்.அப்படி, தினமும் நுாற்றுக்கணக்கான பஞ்சாயத்துகள் அமைச்சருக்கு ‘ரிப்போர்ட்’ செய்யப்படுகிறதாம். இந்த தேர்தலில் உள்குத்து வேலை பார்த்து, கட்சியின் வெற்றிக்கு வேட்டு வைக்க நினைப்பவர்களை ‘லிஸ்ட்’ போட்டு, தேர்தல் முடிந்ததும் களை எடுப்பது தான், கட்சி தலைமையின் முதல் வேலையாக இருக்கும்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு வேட்பாளரிடம், ‘கவலைப்படாதீங்க; கட்சி தலைமைக்கு உங்களது பிரச்னைகள் தெரிவிக்கப்படும். கட்சி கட்டுப்பாட்டை மீறி, தேர்தலில் நிற்பவர்கள் குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிகளை கவனிங்க, ‘வர வேண்டியது’ தானா வரும்,’ என சூசகமாக பேசி அனுப்பியுள்ளார்.அமைச்சர் எதுக்கு கூப்பிடுறாரு, என்ன நடக்குமோனு போன வேட்பாளர்கள், நிம்மதியடைந்துள்ளனர். ‘பெட்டி’ வந்திருச்சானு, வேட்பாளர்களிடம் கட்சியினர் கேட்க, அது, தனி செக் ஷன், அமைச்சரு பார்த்துக்குவாரு, நாம ஓட்டு சேகரிக்கற வேலைய பார்ப்போம்னு,’ கூறி கிளம்பினாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *