எவ்வளவு பணம் பலம் வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற பதவிகளிலும் வெற்றி பெற்று சேலம் மாவட்டத்தில் திமுக மீண்டும் வலுவான நிலைக்கு வரும் என்று சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே. என்.நேரு பேசினார்.
சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு கலந்து கொண்டு திமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக வருகின்ற நகர் புற தேர்தலில் திமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி மகுடத்தில் சேலம் மாவட்டத்தில் நகர்புற தேர்தலில் பெரும் வெற்றியை மேலும் ஒரு வைர கல்லாக பதிக்க வைத்திட அனைவரும் பாடுபட வேண்டும். கழக தோழர்களின் எண்ணத்தை கேட்டு செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதனை உறுதியாக நம்புவதாகவும், சேலத்தில் உள்ள கழக தோழர்களின் எண்ணத்தை கேட்டு அதனை ஆராய்ந்து செயலாற்றி வெற்றியை எட்டுவோம் என்று பேசினார். திமுகவில் வேண்டியவர்கள் வேண்டாதவர் என்று ஒன்றும் இல்லை, கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய பதவிகள் வந்து சேரும் என்றும் பேசினார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், எவ்வளவு பணம் பலம் வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும் சேலம் மாவட்டத்தில் நகர்புற தேர்தலில் நூறு சதவீதம் வெற்றியை தரும், அதிகாரிகள் சிலர் அதிமுகவிற்கு துணை போவதாக குற்றச்சாட்டு இருந்து வருவதாகவும், விரைவில் அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றி கொள்வார்கள் என்று கூறிய அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் வெற்றி பெற்று திமுக மீண்டும் வலுவான நிலைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட அவை தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, சேலம் மாநகர திமுக செயலாளர் ஜெயகுமார், சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட துணை செயலாளர்கள் ரகுபதி, திருநாவுக்கரசர், சம்பத், சுந்திரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், கார்த்திகேயன், ராஜேந்திரன், அம்மாசி, முருகேசன், மாநில தீர்மான குழு உறுப்பினர் தாமரைகண்ணன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் தருண், மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழரசன் உள்பட மாநகர, பகுதி கழக, ஒன்றிய மற்றும் கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டனர்.