தமிழகம் முழுவதும் இன்று 7ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அருப்புக்கோட்டை வழியாக மதுரை திரும்பினார். அப்போது அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் தனியார் மண்டபத்தில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. திடீரென வாகனத்தை நிறுத்தி, அந்த முகாமை பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்த முதல்வர், பொதுமக்களிடம் முதல் தவணை ஊசியா? 2வது தவணையா? என்று கேட்டறிந்தார். பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்களிடமும் மக்கள் வரவேற்பு குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்வையிட்டார். முன்னதாக அருப்புக்கோட்டை சபாஸ்புரத்தில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.