

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து பேசிய திமுக மக்களவை குழு தலைவர், டி.ஆர்.பாலு, குளிர்கால கூட்டத் தொடரில் திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டார். அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்குமாறு திமுக கேட்டிருப்பதாகவும், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களில் விலை கடுமையாக உயர்த்திருப்பதற்கு பெட்ரோல், டீசல் விலையே, அதனை குறைக்குமாறு மத்திய அரசுக்கு திமுக இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தும் எனத் தெரிவித்தார்.

அதேபோல், திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க திமுக குரல் கொடுக்கும் என்றும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று, விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்த சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார்.
திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள 5 பிரச்சனைகளையும் மற்ற எதிர்க்கட்சிகளும் எழுப்ப முடிவெடுத்துள்ளன. குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை மற்றும் வேளாண் சட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று, குரல் கொடுப்பார்கள் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

